403. ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் - TPV4
இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர விசேஷத்தையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.
*******************************************
திருப்பாவையின் நான்காம் பாசுரத்தில் நாடு செழிக்க மழையை அருளுமாறு வருணனுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்!
மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம்:
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
"மழை பொழிவதற்கு காரணக்கடவுளான வருண தேவனே! உன் மழையாகிய நீர்க்கொடையை சிறிதும் தேக்கி வைத்துக்கொள்ளாதே! கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, கம்பீர முழக்கமிட்டு மேலேறி, வான் மேகங்களில் பரவி, திருமாலின் கருமேனி ஒத்த நிறம் பெற்று, மூங்கில் போன்ற அழகிய தோள்களையுடைய திருமாலின் வலக்கரத்தில் வீற்றிருக்கும் சுரதர்சன சக்கரம் போல் மின்னலாக பிரகாச ஒளி வீசி, பரமனது இடக்கரத்தில் உள்ள வலம்புரி சங்கின் சப்தம் போல் இடி இடித்து முழங்கி, அப்பரமன் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு மழைக்கு ஒப்பாக, சிறிதும் தாமதியாமல், மக்களின் நல்வாழ்வுக்காகவும், நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும், பூவுலகெங்கும் பெருமழை பொழிய வேண்டுகிறோம்."
பாசுர உள்ளுரை:
இப்பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்பட்டுள்ளது. மேகத்தில் நீர் மறைந்திருப்பது போல அனைத்துப் பொருட்களிலும், பரமனே அந்தர்யாமியாக உறைந்துள்ளான் என்பதைக் குறிக்கிறது.
ஆழிமழைக் கண்ணா -பகவத் அனுபவம் வாயிலாக பெருமழை ஒத்த ஞானத்தைக் கொண்டிருக்கும் ஆச்சார்யர்கள்
ஒன்று நீ கை கரவேல் - மூன்று மகாமந்திர ரகசியங்களின் அர்த்தத்தை எங்களுக்கு அருளவும்
ஆழியுட் புக்கு - வேத உபநிடதங்கள் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து
முகந்து கொடு - அவற்றை தெளிவாக கற்று, அர்த்தங்களை உணர்ந்து
ஆர்த்தேறி - கம்பீரமாக எழுந்து
ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து - கருமேனியனான பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால், ஆச்சார்யரும் பரமன் போலவே கருநிறமும், தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர்! (பரந்தாமனின் எல்லையற்ற கருணையாக ஆச்சார்யர் உருவகம் பெறுகின்றனர்!)
இங்கே "மேகம்" என்பது ஆழ்வார்களையும், ஆச்சார்யர்களையும் உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது. மேகம் போலவே ஆச்சார்யர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்ப்பார்க்காமல், ஞானத்தை வழங்குகின்றனர்!
எவ்வாறெனில், மேகமானது, கடல் நீரை உட்கொண்டு, பூவுகலகிற்கு நன்மை பயப்பது போல, இவ்வடியார்களும், பகவத் அனுபவத்தில் (பரமன் துயில் கொண்டுள்ள கடலாகிய உருவகம்!) திளைத்து அதன் வாயிலாக கிட்டிய ஞானத்தை (மழையாகிய உருவகம்!) இப்பூவுலகில் நிறைத்திருக்கிறார்கள்!
கடலில் கலந்திருக்கும் உப்பைப் போன்ற, புரிந்து கொள்ள கடினமான விஷயங்களையும் எளிமையாக (உப்பு சுவையில்லாத மழை நீர் போல) அளிக்க வல்லவர்கள் ஆச்சார்யர்கள்!
ஆழிபோல் மின்னி - திவ்யஞானத்தால் விளைந்த பேரொளியுடன் பிரகாசிக்கின்ற
ஆச்சார்யர்கள் (ஞானத்தால்ஒளி பெற்றதால்!) திருச்சக்கரமாகவும் உருவகப்படுத்தப் பட்டிருப்பதாகவும் கொள்ளலாம்!
வலம்புரி போல் நின்றதிர்ந்து - ஹயக்ரீவ கோஷத்தின் உருவகம்
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் - ஞானத்தை மழை போல் பொழிந்து
நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் - (மோட்ச சித்தியை அருளவல்ல) ஆசார்ய திருவடிகளில் நாங்கள் சரண் புகுந்தோம் ("மார்கழி நீராட" என்பது, ஆச்சார்ய சரணாகதியை குறிக்கிறது)
பாசுரச் சிறப்பு:
உறுப்புகளில் கண் எவ்வாறு முதன்மையானதோ, அது போல வருணன் மழைக்கு முதல் காரணகர்த்தா என்பதால், ஆண்டாளால் "கண்ணா" என்று விளிக்கப்படுகிறார்!
இன்னொறு ரசமான விஷயத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். மாதவன், கேசவன், தாமோதரன், பத்மனாபன், நாராயணன், கோவிந்தன் என்ற திருநாமங்கள் திருப்பாவையில் பல பாசுரங்களில் பாடப் பெற்றிருந்தாலும், கிருஷ்ணாவதார நிகழ்வுகள் பல இடங்களில் சுட்டப்படிருந்தாலும், இப்பாசுரத்தில் தான் கிருஷ்ணாவதாரப் பெயரான "கண்ணா" என்பதை ஆண்டாள் விளித்துப் பாடுகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது! மழைத் தேவனான வருணனை அழைப்பதாகவே இருந்தாலும், வருணனைக் கூட நாச்சியார் கண்ணனாகவே கண்டாள் என்பதை ஒரு கவித்துவ நயமாக கொள்ளலாமில்லையா!
"மழைக்கண்ணா" என்று பாடாமல் "ஆழிமழைக்கண்ணா" என்கிறாள் ஆண்டாள்! அதாவது, வருணனின் பெருமையின் விஸ்தாரத்தை (மழைக்கு முதற்காரணமான கடல்களுக்கெல்லாம் வருணன் தலைவன் என்பதை!) ஒரு விளிப்பில் அழகாகச் சொல்கிறாள்!
"ஒன்று நீ கை கரவேல்" எனும்போது, வருணனுக்கு பரமன் வழங்கியுள்ள அற்புதமான (உலக உயிர்க்கெல்லாம் வாழ்வளிக்கும்) தொழிலின் மகத்துவம் நயமாக வெளிப்படுகிறது. தனது வள்ளல் தன்மையை ஒருபோதும் குறைத்துக் கொள்ளலாகாது என்பதை வருணனுக்கே நினைவூட்டுகிறாள் சின்னப்பெண் கோதை!
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து - கருமேகமானது தனது கொடையான மழையை பூமிக்கு வழங்கிய மாத்திரத்தில் வெளுத்து விடுகிறது. ஆனால், ஆச்சார்யர்களும், அப்பரமனும் ஞானத்தையும் அருளையும் குறைவின்றி அளித்துக் கொண்டே இருக்க வல்லவர்கள் ஆதலால், அவர்களின் கருமை நிறம் குன்றுவதில்லை!
அதோடு, மழை பெய்வது ஒரு மங்கலகரமான செயல் என்பதால் மங்கல இசையாக வலம்புரி நின்றதிர்வது போன்ற சத்தமும் வேண்டும் என்கிறாள்.
பத்மனாபன் கையில் ஆழி ஏன் மின்ன வேண்டும்? பரமனின் நாபியிலிருந்து எழுந்த தாமரை மலரில் பிரம்மன் அவதரித்ததால், பரமனுக்கு பத்மனாபன் என்ற திருநாமம். பரந்தாமனுக்கு மகனாக பிரம்மா பிறந்ததை எண்ணி அவனது சுதர்சன சக்கரம் மகிழ்ந்து மின்னியதாம்! திருப்பாவையில் ஒவ்வொரு பெயர்ப் பிரயோகத்திற்கும் காரணம் உண்டு, அது தான் ஆண்டாள்!
இறுதியாக, "வாழ உலகினில் பெய்திடாய்" என்று பாடுவதிலும் விஷயமிருக்கிறது. பெருவெள்ளம் வந்து அழிவேற்படாத வகையில் மழையை அருளுமாறு முத்தாய்ப்பாக வருணனுக்கு ஞாபகப்படுத்துகிறாள்.
தமிழ் இலக்கணம் இங்கு நின்று விளையாடுகிறது :)
"ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து" எனும்போது மெய் உவமையும், உரு உவமையும்,
"ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து" எனும்போது வினை உவமையும்,
"சரமழை போல்" எனும்போது பயன் உவமையும் வெளிப்படுவதைக் காணலாம்.
இப்பாசுரத்தில், தமிழுக்கே சொந்தமான "ழ" என்ற எழுத்து "ஆழி (3 தடவை) மழை (2 தடவை), ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து" என்று பதினோரு முறை வருவதைக் காணலாம்.
இதன் மூலம், சூடிக் கொடுத்த நாச்சியார், தனது தந்தையான பெரியாழ்வாரை மிஞ்சி விடுகிறார் ! பெரியாழ்வாரின் "குழல் இருந்து" என்று தொடங்கும் 285-வது பாசுரத்தில் "ழ" பத்து முறை வரும் என்பது குறிப்பிடத்தக்கது :)
சங்கர் தனது பின்னூட்டத்தில் சொன்ன சுவையான விளக்கத்தையும், அதற்கான எனது மறுமொழியையும் பதிவிலேயே சேர்த்து விட்டேன் :)
**********************************
அன்புள்ள பாலா
இந்த நான்காவது பாசுரத்திற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான வியாக்கியானத்தை கேட்டிருக்கிறேன்.
"ஆழி மழைக் கண்ணா" என்று வருணனை ஏன் அங்கு கண்ணனின் நாமமிட்டு அழைத்தார் ? " ஒன்று நீ கை கரவேல் " அதாவது " ஒன்றை நீ மறைக்காதே " என்று சொல்கிறார். எதை மறைக்காதே என்று சொல்கிறார் ?
"ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய்"
இந்தக் காரியமாகிய மழை பொழிவித்தலை செய்ய சூரியனுடைய துணை வேண்டுமல்லவா.. அந்த சூரியனையும் மறைக்கக் கூடிய வல்லமை பெற்றவன் நீ (மகாபாரதத்தில் ஜெயத்ரதன் வதம் போது சக்கரம் விட்டு சூரியனை மறைத்தது) அதனால் ஏதாவது பக்தனுக்கு அருள் பாலிப்பதற்காய் அப்படி சூரியனை மறைத்து மழை பெய்விக்காமல் செய்துவிடாதே..உலகம் வளம் பெறவும் நாங்கள் மார்கழி நீராடி மகிழ்ந்து உன்னை துதிக்கவும் மழை மிகவும் அவசியம் என்று சொல்கிறாராம். அதனால் தான் மழை கொடு என்று சிம்பிளாக கேட்க்காமல் முழு water cycle -ஐயும் இந்த பாசுரத்தில் குறிப்பிடுகிறாராம் :)
இது சரியான விளக்கமா...over to Bala,KRS & Kumaran :)
**********************************
சங்கர்,
சூரியனை மறைத்து விடாமல் இருக்குமாறு ஆண்டாள் பரமனாகிய கண்ணனிடம் வேண்டுவதாக தாங்கள் கூறிய விளக்கத்தின் தொடர்ச்சியாக நான் (வீட்டுக்குள்ளேயே!) ரூம் போட்டு யோசித்ததில் தோன்றியதை எழுத உத்தேசம் :)
"ஆழிமழைக் கண்ணா, ஒன்று நீ கை கரவேல்" என்று கோதை நாச்சியார் பாடும்போது பரந்தாமனைத் தான் விளித்து வேண்டுகிறார் என்று எண்ண பாசுரத்தில் சாத்தியம் இருப்பதாகவேத் தோன்றுகிறது. மழைக்குக் கடவுளாக வருணன் இருப்பினும், கடல் நீரை ஆவியாக்குவதால், சூரியனே முதல் காரணகர்த்தா ஆகிறான்! ஆனால், கடல் நீருக்குச் சொந்தக்காரன் வருணன் என்பதால், மழை பொழிய சூரியன், வருணன் ஆகிய இருவருமே பிணக்கின்றிச் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது இல்லையா ?
அதனாலேயே (மேலோட்டமாகப் பார்த்தால், வருணனை "கண்ணா" என்றழைப்பது போல் தோன்றினாலும்!) சூரியன், வருணன் என்ற இருவருக்கும் (மற்றும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும்) தலைவனான பரமாத்விடம், மார்கழி நீராட மழை வேண்டி விண்ணப்பிப்பதே உகந்தது என்று ஆண்டாள் பாடுவதாக சொல்வதும் பொருத்தமானதே !!!!
மேலும், சூடிக் கொடுத்த நாச்சியார் வெறுமனே "சூரியனை மறைத்து விடாதே!" என்று கூறாமல், மழைச் சுற்றையே (இதை 'வாட்டர் சைக்கிள்' என்று அழைக்க வேண்டாமே:)) அறிவியல் ரீதியாக விவரித்து, மழை பொழிவதற்கு சூரியனின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறார்!
அதே சமயம், எல்லாமறிந்த பரமனுக்கே தான் "மழை விளக்கம்" அளிப்பதற்காக கண்ணனுக்கு கோபம் வந்து விடுமோ என்ற எண்ணத்தில், மின்னலைச் சக்கரத்தின் பேரொளிக்கும், இடியை சங்கத்தின் முழக்கத்திற்கும், மழையை சார்ங்கத்திலிருந்து புறப்பட்ட அம்பு மழைக்கு ஒப்பாக பாசுரத்தில் பாடி கண்ணபிரானை மனம் குளிர வைத்து விடுகிறார் ! இதன் பின்னரும், அடியவர் மார்கழி நீராடி மகிழ, மழைக்கொடையை வழங்காமல் கண்ணனால் இருக்க முடியுமா என்ன ? :)
ஆண்டாள் நாச்சியார், "ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து" என்று பாடுவது மின்னலைத் தொடர்ந்தே இடி முழக்கம் ஏற்படுகிறது என்பதால்! ஒளியின் வேகம், ஒலியின் வேகத்தைக் காட்டிலும் மிக அதிகம் என்பது கோதை நாச்சியாருக்குத் தெரியாத விஷயமா என்ன ?
என்றென்றும் அன்புடன்
பாலா
***********************************
என்றென்றும் அன்புடன்
பாலா
23 மறுமொழிகள்:
Test !
thanks for the post ...
அன்புள்ள பாலா
இந்த நான்காவது பாசுரத்திற்கு ஒரு சுவையான மற்றும் வித்தியாசமான வியாக்கியானத்தை கேட்டிருக்கிறேன்.
"ஆழி மழைக் கண்ணா" என்று வருணனை ஏன் அங்கு கண்ணனின் நாமமிட்டு அழைத்தார் ? " ஒன்று நீ கை கரவேல் " அதாவது " ஒன்றை நீ மறைக்காதே " என்று சொல்கிறார். எதை மறைக்காதே என்று சொல்கிறார் ?
"ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வ னுருவம் போல் மெய் கருத்து
பாழியந் தோளுடை பத்பநாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய்"
இந்தக் காரியமாகிய மழை பொழிவித்தலை செய்ய சூரியனுடைய துணை வேண்டுமல்லவா..அந்த சூரியனையும் மறைக்கக் கூடிய வல்லமை பெற்றவன் நீ (மகாபாரதத்தில் ஜெயத்ரதன் வதம் போது சக்கரம் விட்டு சூரியனை மறைத்தது) அதனால் ஏதாவது பக்தனுக்கு அருள் பாலிப்பதற்காய் அப்படி சூரியனை மறைத்து மழை பெய்விக்காமல் செய்துவிடாதே..உலகம் வளம் பெறவும் நாங்கள் மார்கழி நீராடி மகிழ்ந்து உன்னை துதிக்கவும் மழை மிகவும் அவசியம் என்று சொல்கிறாராம். அதனால் தான் மழை கொடு என்று சிம்பிளாக கேட்க்காமல் முழு water cycle -ஐயும் இந்த பாசுரத்தில் குறிப்பிடுகிறாராம் :)
இது சரியான விளக்கமா...over to Bala,KRS & Kumaran :)
அன்பின் சங்கர்,
சுவையான விளக்கத்திற்கு நன்றி.
இதை நானும் பெரியவர் ஒருவர் சொல்லக் கேட்டதுண்டு :)
பொருத்தமான விளக்கமே என்பது தான் என் எண்ணமும் !
எ.அ.பாலா
//இது சரியான விளக்கமா...over to Bala,KRS & Kumaran :)//
கண்ணபிரான் மற்றும் குமரன் என்ன சொல்கிறார்கள் என்று அறிய ஆவல் :)
சங்கர்,
//"ஆழி மழைக் கண்ணா" என்று வருணனை ஏன் அங்கு கண்ணனின் நாமமிட்டு அழைத்தார் ? " ஒன்று நீ கை கரவேல் " அதாவது " ஒன்றை நீ மறைக்காதே " என்று சொல்கிறார். எதை மறைக்காதே என்று சொல்கிறார் ?
//
சூரியனை மறைத்து விடாமல் இருக்குமாறு ஆண்டாள் பரமனாகிய கண்ணனிடம் வேண்டுவதாக தாங்கள் கூறிய விளக்கத்தின் தொடர்ச்சியாக நான் (வீட்டுக்குள்ளேயே!) ரூம் போட்டு யோசித்ததில் தோன்றியதை எழுத உத்தேசம் :)
"ஆழிமழைக் கண்ணா, ஒன்று நீ கை கரவேல்" என்று கோதை நாச்சியார் பாடும்போது பரந்தாமனைத் தான் விளித்து வேண்டுகிறார் என்று எண்ண பாசுரத்தில் சாத்தியம் இருப்பதாகவேத் தோன்றுகிறது. மழைக்குக் கடவுளாக வருணன் இருப்பினும், கடல் நீரை ஆவியாக்குவதால், சூரியனே முதல் காரணகர்த்தா ஆகிறான்! ஆனால், கடல் நீருக்குச் சொந்தக்காரன் வருணன் என்பதால், மழை பொழிய சூரியன், வருணன் ஆகிய இருவருமே பிணக்கின்றிச் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது இல்லையா ?
அதனாலேயே (மேலோட்டமாகப் பார்த்தால், வருணனை "கண்ணா" என்றழைப்பது போல் தோன்றினாலும்!) சூரியன், வருணன் என்ற இருவருக்கும் (மற்றும் முப்பது முக்கோடி தேவர்களுக்கும்) தலைவனான பரமாத்விடம், மார்கழி நீராட மழை வேண்டி விண்ணப்பிப்பதே உகந்தது என்று ஆண்டாள் பாடுவதாக சொல்வதும் பொருத்தமானதே !!!!
மேலும், சூடிக் கொடுத்த நாச்சியார் வெறுமனே "சூரியனை மறைத்து விடாதே!" என்று கூறாமல், மழைச் சுற்றையே (இதை 'வாட்டர் சைக்கிள்' என்று அழைக்க வேண்டாமே:)) அறிவியல் ரீதியாக விவரித்து, மழை பொழிவதற்கு சூரியனின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறார்!
அதே சமயம், எல்லாமறிந்த பரமனுக்கே தான் "மழை விளக்கம்" அளிப்பதற்காக கண்ணனுக்கு கோபம் வந்து விடுமோ என்ற எண்ணத்தில், மின்னலைச் சக்கரத்தின் பேரொளிக்கும், இடியை சங்கத்தின் முழக்கத்திற்கும், மழையை சார்ங்கத்திலிருந்து புறப்பட்ட அம்பு மழைக்கு ஒப்பாக பாசுரத்தில் பாடி கண்ணபிரானை மனம் குளிர வைத்து விடுகிறார் ! இதன் பின்னரும், அடியவர் மார்கழி நீராடி மகிழ, மழைக்கொடையை வழங்காமல் கண்ணனால் இருக்க முடியுமா என்ன ? :)
ஆண்டாள் நாச்சியார், "ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து" என்று பாடுவது மின்னலைத் தொடர்ந்தே இடி முழக்கம் ஏற்படுகிறது என்பதால்! ஒளியின் வேகம், ஒலியின் வேகத்தைக் காட்டிலும் மிக அதிகம் என்பது கோதை நாச்சியாருக்குத் தெரியாத விஷயமா என்ன ?
என்றென்றும் அன்புடன்
பாலா
பாலா
அப்படிப் போடு :)
// ச.சங்கர் said...
பாலா
அப்படிப் போடு :)
//
nalla Response for my explanation ;-)
சங்கரின் விளங்கங்களில், பாரதப் போரில் மறைத்தது போல் சூரியனை மறைக்காதே, - ஒன்று நீ கை கரவேல் என்று சொல்லுவது ஒரு அழகிய நயம் தான்!
ரூம் போட்டு யோசிச்சி பாலாவும் அருமையாச் சொல்லி இருக்காரு! :-)
சற்றே மேலதிக விளக்கங்கள்.
ஆழி மழைக் கண்ணா என்று வருணனையோ, மழையையோ அழைக்கவில்லை!
ஆழி உட் புக்கு = ஆழியோ மழையோ கடலுக்குள் புகாது! அதான் அங்கேயே இருக்கே!
முகந்து கொண்டு = வருணனே தானாக முகந்து கொள்ளவில்லை! தானாகவே ஆர்த்து மேலேற வில்லை!
உருவம் போல் மெய் கருத்து = வருணனின் உடல் கருக்கவில்லை! மேகத்தின் உடல் தான் கருக்கிறது!
ஆழி போல் மின்னி, வலம்புரி போல் அதிர்ந்து = வருணன் மின்னவும் மாட்டான், அதிரவும் மாட்டான்! இடி இந்திரனின் ஆயுதம்!
அதனால் இங்கு கண்ணா என்பது வருணனைக் குறிப்பதாகாது!
பல வித சக்திகள் (forms of energy) ஒன்று சேர்ந்து இந்த நீர்ச்சுழற்சிச் செயலை உருவாக்குகின்றன.
மழை, ஆழி, சூரியன், காற்று, மேகம், மின்னல் (ஒளி), இடி (ஒலி) என்று பல சக்திகளுக்கும் உள்ளிருக்கும் ஆற்றலைத் தான் கண்ணா என்று விளிக்கின்றாள்!
கைகரவேல்,
தாழாதே
பெய்திடாய்
என்று ஆணைச் சொற்களாகவே சொல்கிறாள். வேண்டிக் கொள்ள வில்லை! அதட்டுகிறாள்!
சென்ற பாசுரத்தில் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்-ன்னு சொல்லிட்டு, அப்படிச் செல்வம் நிறையணும் என்றால் மழை வேண்டுமே...அதனால் தான் இந்தப் பாசுரம்!
கைகரவேல் = மறைக்காதே!
ஒன்று நீ கைகரவேல் = ஒன்னுத்தையும் மறைக்காதே!
சூரியனை மட்டும் மறைக்காதே-ன்னு பொருள் இல்லை!
நீர்ச்சுழற்சிக்கு சூரியன், ஆழி, மேகம், காற்று எல்லாம் வேண்டும்!
மேகம் கருத்தாலும், காற்றடிச்சா கலைஞ்சு போயிடும்! அப்போ மழை பொழியாது!
சூரியன் சுடலைன்னாலும் மழை பொழியாது!
மேகம் போதுமான அளவு நீரைச் சேர்த்து கனக்காமல் போனாலும் மழை பொழியாது!
அதனால் சூரியன், காற்று, கடல், மேகம் எல்லாவற்றின் உதவியும் வேண்டும்!
அதனால் தான் "ஒன்று" நீ கைகரவேல்!
"ஒன்றையும்" ஒளித்து வைக்காமல், எல்லாவற்றையும் கொடு! என்று கண்ணனிடம் உரிமையுடன் கேட்கின்றாள்!
ஆழி போல் மின்னி என்று மின்னல் முதல் தோன்றுவதையும்
வலம்புரி போல் நின்று அதிர்ந்து என்று இடி, மின்னலுக்குப் பிறகு தான் தோன்றுகிறது என்பதையும் சொல்கிறாள் அல்லவா! light travels faster than sound என்று அறிவியலும் சொல்லி ஆகி விட்டது!
சாரங்கம் உதைத்த சரமழை போல் = சாரங்கம் என்னும் இராமனின் வில்லில் இருந்து சரம் சரமா புறப்பட்டா அழிவு தானே? தீயவர்கள் அழிவார்களே!
மழைக்கு நல்லவர், தீயவர் என்று பாகுபாடு கிடையாதே! எல்லார்க்கும் பெய்யும் மழை ஆயிற்றே!
அதனால் தான் அடுத்த அடியில் உதைத்த சர மழை போல், "வாழ" உலகினில் பெய்திடாய் என்று...அனைவரும் வாழ்வதற்காகப் பெய் என்று கூறி விடுகிறாள்!
அன்னை தானே அப்பனின் கோபத்தையும் தணித்து, நல்லார்க்கும் பொல்லார்க்கும் சேர்த்தே அருள் தர புருஷகாரம் செய்பவள்! அதான் ஆண்டாள் அந்தச் சாரங்க வில் போல் அல்லாமல், இந்தச் சாரங்கத்தின் சரமழை "வாழ" வைக்க வேன்டும் என்று ஒரே போடாகப் போடுகிறாள்!
இன்னொன்னு கவனீச்சீங்களா?
இந்தப் பாசுரத்தில் தான் தமிழுக்கே உரிய "ழ"கரம் அதிகமாக வரும்!
ஆழி
மழை
ஆழி
ஊழி
பாழி
ஆழி
தாழாதே
வாழ
மார்கழி,
மகிழ்ந்தேலோ
என்று மொத்தம் பத்து ழகரங்கள்!
கண்ணபிரான்,
வாங்க, வாங்க. நீங்க வரலியேன்னு ஒரு குறை இருந்துச்சு, இப்ப வந்து ஒரு நயமான விளக்கத்தைக் கொடுத்ததிலே, அந்த குறை நீங்கி விட்டது :)
//
ஆழி மழைக் கண்ணா என்று வருணனையோ, மழையையோ அழைக்கவில்லை!
ஆழி உட் புக்கு = ஆழியோ மழையோ கடலுக்குள் புகாது! அதான் அங்கேயே இருக்கே!
முகந்து கொண்டு = வருணனே தானாக முகந்து கொள்ளவில்லை! தானாகவே ஆர்த்து
மேலேற வில்லை!
உருவம் போல் மெய் கருத்து = வருணனின் உடல் கருக்கவில்லை! மேகத்தின் உடல்
தான் கருக்கிறது!
ஆழி போல் மின்னி, வலம்புரி போல் அதிர்ந்து = வருணன் மின்னவும் மாட்டான்,
அதிரவும் மாட்டான்! இடி இந்திரனின் ஆயுதம்!
அதனால் இங்கு கண்ணா என்பது வருணனைக் குறிப்பதாகாது!
//
இன்னொரு கோணத்தில அழகாக சொல்லியிருக்கிறீர்கள், பொருத்தமாகவும் இருக்கு !
//அன்னை தானே அப்பனின் கோபத்தையும் தணித்து, நல்லார்க்கும் பொல்லார்க்கும்
சேர்த்தே அருள் தர புருஷகாரம் செய்பவள்! அதான் ஆண்டாள் அந்தச் சாரங்க வில் போல்
அல்லாமல், இந்தச் சாரங்கத்தின் சரமழை "வாழ" வைக்க வேன்டும் என்று ஒரே போடாகப்
போடுகிறாள்!
//
சரி தான், திருமகளின் ரெகமண்டேஷன் இல்லாமல், பரமனின் அருள் எளிதில் கிட்டாது
என்பது பெருந்தகைகள் பலரும் சொன்னது தானே :)
//இன்னொன்னு கவனீச்சீங்களா?
இந்தப் பாசுரத்தில் தான் தமிழுக்கே உரிய "ழ"கரம் அதிகமாக வரும்!
ஆழி
மழை
ஆழி
ஊழி
பாழி
ஆழி
தாழாதே
வாழ
மார்கழி,
மகிழ்ந்தேலோ
என்று மொத்தம் பத்து ழகரங்கள்!
//
தம்பி, இதைப் பற்றி நான் பதிவிலேயே சொல்லியிருக்கேனே, பதிவை வாசிக்காம பின்னூட்டம் இடற ஆள் நீங்க இல்லைன்னு எனக்குத் தெரியும் ;-) மொத்தம் 11 ழகரங்கள் !நான் பதிவில் சொன்னது கீழே !
***************
இப்பாசுரத்தில், தமிழுக்கே சொந்தமான "ழ" என்ற எழுத்து "ஆழி (3 தடவை) மழை (2
தடவை), ஊழி, பாழியம், தாழாதே, வாழ, மார்கழி, மகிழ்ந்து" என்று பதினோரு முறை
வருவதைக் காணலாம்.
இதன் மூலம், சூடிக் கொடுத்த நாச்சியார், தனது தந்தையான பெரியாழ்வாரை மிஞ்சி விடுகிறார் ! பெரியாழ்வாரின் "குழல் இருந்து" என்று தொடங்கும் 285-வது பாசுரத்தில் "ழ" பத்து முறை வரும் என்பது குறிப்பிடத்தக்கது :)
*******************
எ.அ.பாலா
///kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சற்றே மேலதிக விளக்கங்கள்.///
KRS நன்றி
//தம்பி, இதைப் பற்றி நான் பதிவிலேயே சொல்லியிருக்கேனே, பதிவை வாசிக்காம பின்னூட்டம் இடற ஆள் நீங்க இல்லைன்னு எனக்குத் தெரியும் ;-)//
அண்ணா...சாரிங்கண்ணா
பதிவ படிச்சாலும், பின்னூட்டத்துல பெத்த விளக்கமா கேட்டீங்களா? அதுல மறந்து போச்சு!
இப்போதைக்கு அப்போதே மறந்து போனேன்! :-)))
Test !
அருமையான விளக்கம் பாலா சார். நெகிழ்வா இருக்கு
3. தமிழ் இலக்கணம் இங்கு நின்று விளையாடுகிறது :)
"ஊழிமுதல்வ னுருவம் போல் மெய் கருத்து" எனும்போது மெய் உவமையும், உரு உவமையும்,
"ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து" எனும்போது வினை உவமையும்,
"சரமழை போல்" எனும்போது பயன் உவமையும் வெளிப்படுவதைக் காணலாம்.
எங்கயோ போயீட்டீங்க
அடேங்கப்பா.. விளக்கங்களை வைத்து பார்க்கும் போது, ஆண்டாளை, வெறும் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் பாடலாக மட்டும் நினைக்க முடியவில்லை.. வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் என்று போற்றுவதற்காக மட்டும் சொல்லவில்லை என்று தெரிந்து கொண்டேன்.
மின்னல்,
வாசிப்புக்கும், பாராட்டுக்கும் நன்றி.
ராகவ்,
கோதை நாச்சியார் பற்றி இப்போது புரிந்ததா ? :)
Republished this thiruppavai posting after adding more information and pictures
Reference: your first message.
What is TEST there?
Reference: your second message.
Who is that கண்ணபிரான்?
Are you referring to me?
My name has been explained in detail in my own blog, as also, in Tamilhindu.com. In that .com, one Tiruchykkaaran accused me of belittling the name கண்ணபிரான். I have given him a long detailed reply regarding my name. The reply became famous. Could read if time permitting. Ok?
Alert:
Your name is getting mentioned in my blog!!!
www.kaalavaasal.blogspot.com
ஆழி மழைக்கண்ணா - ஆழி மழைக்கு அண்ணா. சதாரா மாலதி விளக்கம் -
ஆழிமழைக்கண்ணா' பாசுரத்தில் படைப்பாளியின் அறியாப்பருவம் இயற்கையாக யதார்த்தமாக வெளிப்படும்.
சிறுமிகள் என்று தன்னையும் தன் தோழிகளையும் பல இஇடத்தில் அடையாளம் காட்டிக் கொள்ளும் ஆண்டாள் சிறுமியர் மட்டுமே செய்யக்கூடிய காரியத்தை இதில் செய்யக் காண்கிறோம்.
'ஓ!மழைக்காரா!'என்பது போல 'ஆழி மழைக்கு அண்ணா!'என்று மழை தரும் தேவனை அழைக்கிறாள்.மாம்பழமோ கொய்யாப்பழமோ விற்பவனை 'மாம்பழம்' ',கொய்யா, ' என்று குழந்தைகள் அழைப்பது போல 'மழைக்காரா!' என்று அறியாமையும் மரியாதையுமாய் அழைக்கிறாள்.
மழை கொண்டு வருபவரின் பேர் அவளுக்குத் தெரியாது. மழைக்கு அதிபன் யமனோ வருணனோ அஷ்ட வசுவோ யார் கண்டது?
இல்லாதவனைத் தேடி அழைப்பதற்கும் கண்முன் வந்து வணங்கி நிற்பவனை அவன் தொழிலையிட்டு மரியாதையுடன் அழைப்பதற்கும் எத்தனையோ வித்யாசமிருக்கிறது. மழை தேவன் இஇவர்கள் கண்முன் வந்துவிட்டான் என்று இவள் குரலின் தோரணையிலிருந்து தெரிய வருகிறது.
கிருஷ்ணாவதார நிகழ்ச்சிகள் பல திருப்பாவையில் சொல்லப்பட்டிருப்பினும் ஒரு இடத்திலாவது கிருஷ்ணன் என்றோ கண்ணன் என்றோ பெயரைக்குறிப்பிடவேயில்லை ஆண்டாள்.
பாமரர்கள் ஆழிமழைக்கண்ணா என்ற விளியில் கண்ணன் இருப்பதாக நினைக்கக் கூடும் ஆனால் ஆழிமழைக்கு அதிபதியை அப்படி அழைத்திருக்கிறாள் என்பது நுணுகிப் பார்த்தால் தான் தெரிய வரும்.
மாதவன், கேசவன்,தாமோதரன், பத்மனாபன், நாராயணன், கோவிந்தன், நெடுமால், உம்பர்கோமான், என்று பல பேர்களைப்
போடுவாள்.பிரசித்தமான அவதாரப் பெயரான கண்ணன் கிடையாது.[நாச்சியார் திருமொழியில் 'கண்ணன் என்னும் கருந்தெய்வம்'என்று சொல்லியிருப்பதை நினைவு கூர்க] கோபர்களுக்குத் தங்கள்
ரகசியத்தை மறைக்க அப்படிச் செய்திருக்கலாம். இஇருந்தும் தாங்க முடியாத உற்சாகத்தில் கண்ணன் என்ற பெயர் உச்சரிக்கப் படும்படி ஆழிமழைக்கு அதிபதியை ஆழிமழைக்கண்ணா என்று அழைத்து விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
இன்று இரா முருகன் பேஸ்புக்கில் படித்தது. இந்தக் கோணம் இங்கு விவாதிக்கப்படவில்லை என்ற ஞாபகம் வந்ததால், பதித்தேன்.
http://www.facebook.com/ERA.MURUKAN/posts/319400218083618
ஆழிமழை கண்ணா என்பதற்கும் ஆழி மழைக்கண்ணா என்பதற்கும் இருக்கும் நுட்பமான வித்தியாசத்தை இந்த விளக்கம் அழகாக வெளிக் கொண்டு வந்திருக்கிறது. இதற்கே என் வோட்டு!
Post a Comment